Sunday, September 28, 2014

நம்பிக்கை

நம்பிக்கை என்பது   ஒரு நாளில் உதிர்ந்து விடும்  பூவாக இருந்துவிடக் கூடாது. 

மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்.

- புஷ்ரா கனி - 

படித்ததில் பிடித்தது

பிடித்திருந்தால் பகிருங்கள் சொந்தங்களே!!

ஆஸ்திரேலியாவில் பிரசவத்திற்காக கேதே ஒக் டேவிட் என்ற ஆஸ்திரேலியப் பெண்மனி சிட்னி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். கருத்தரித்து 27 வாரங்களே ஆன நிலையில். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைந்த எடையில் பிறந்த ஒரு ஆண், ஒரு பெண்.
இரு குழந்தைகளையும் காக்க மருத்துவர்கள் பெரு முயற்சி செய்தனர்.
பெண் குழந்தை உயிர் பிழைத்தது. ஆனால்..
மருத்துவர்கள் கடைசி வரை போராடியும் ஆண் குழந்தையைக் காப்பாற்ற
முடியவில்லை. குழந்தை இறந்துவிட்டதாக தாயிடம் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தாங்கிக் கொள்ள முடியாத, அந்தத் தாய்.. இறந்த குழந்தையை மார்போடு கட்டி அணைத்து அழ ஆரம்பித்து விட்டார்.
தொடர்ந்து இரண்டு மணி நேரம் தன் உடலுடன் குழந்தையை அணைத்துக் கொண்டு அழுதவாறே இருந்தார்.
அப்போது.. குழந்தை மெதுவாக
மூச்சு விடுவதை அந்தத் தாய் உணர்ந்தார். உடன் மருத்துவர்களை அழைத்து குழந்தை மூச்சு விட ஆரம்பித்ததைக் கூறினார்.
மருத்துவர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்து.. இங்குபேட்டரில் வைத்து..
சகஜ நிலைக்குக் கொண்டு வந்தனர்.சிறிது நேரத்தில் கண் விழித்தது குழந்தை..
அதைப் பார்த்து.. ஆனந்தக்கண்ணீர் விட்ட தாயின் விரல்களை குழந்தை பிடித்துக் கொண்டது. இறந்த குழந்தையை உயிர் பிழைக்க வைத்தது எது..
ஆம்..
அந்த தாயின் அரவணைப்பு..
இப்போது சொல்லுங்கள், உலகத்தில் சிறந்தது தாய்மைதானே

BushraKani

உன்னை நேசிப்பவர்களை...விட்டு 



நீ தூர விலகி செல்ல செல்ல... 




உன் உள்ளம் அவர்களின் நெருங்கி வருமே தவிர


மறந்து விட முடியாது 



அதுதான் அன்பின் சக்தி

என்றும் அன்புடன்  புஷ்ரா கனி 

Friday, September 26, 2014

The Silent Killer Blood pressure

ஹெல்த்

பி.பி. (Blood pressure) என்ற  வார்த்தையைக் கேட்டாலே பி.பி. ஏறுகிற அளவுக்கு இன்றைக்கு மிகப் பெரிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது பி.பி. என்கிற ‘ரத்த அழுத்த நோய்’ அல்லது ‘ரத்தக் கொதிப்பு’. கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் நாட்டில் ரத்தமிகு அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கு தங்களுக்கு ரத்தமிகு அழுத்த நோய் உள்ளது என்ற உண்மை தெரியாது என்பது தான் மிகப்பெரிய சோகம்.

டயபடீஸ் என்று சொல்லப்படுகிற நீரிழிவுக்கு இணையாக இன்றைக்கு பெரும்பாலானவர்களைப் பீடித்திருக்கிறது இந்த பி.பி. இது பற்றி விழிப்புணர்வு இல்லாமலே இந்நோய்க்கு பலியாகிறார்கள் பாமர மக்கள். இத்தனைக்கும் புற்றுநோய் போன்ற கொடிய நோய் அல்ல இது. முறையான உணவுப்பழக்கம் மற்றும் தவறாமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நீடூழி வாழ முடியும்.தேவை ‘ரத்த அழுத்த நோய்’ குறித்த விழிப்புணர்ச்சிதான்.

ரத்த அழுத்தம் என்றால் என்ன? அது கூடினாலோ, குறைந்தாலோ என்ன செய்யும்?

எல்லா சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார் பொது மருத்து வரும், ஆதரவு சிகிச்சை நிபுணருமான ரிபப்ளிகா.ஒவ்வொரு முறையும் இதயம் சுருங்கி விரிந்து ரத்தத்தை உடலின் எல்லா பாகங்களுக்கும் அனுப்புகிறது. இதயம் இயங்கும்போது குழாய்களில் உள்ள ரத்தம் அவற்றின் உள்பகுதியில் ஒருவகையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தான் ரத்த அழுத்தம் என்று சொல்கிறோம். ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனின் ரத்த அழுத்தம் 120/80 mmHg என்ற அளவில் இருப்பதுதான் இயல்பான நிலை.

ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையைவிட மிக அதிகமாக உயர்ந்திருப்பதை ‘ரத்த அழுத்த நோய்’ அல்லது ‘ரத்தக் கொதிப்பு’ என்கிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது.  சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பிறகே கண்டு பிடிக்கப்படும்.  எனவே, இதனை ‘சைலன்ட் கில்லர்’ என்றும் சொல்லலாம்.

இதயம் ஒவ்வொருமுறை சுருங்கி விரியும்போதும் ரத்தக்குழாய்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தம் இரண்டு வகைப்படும். அதாவது, இதயம் சுருங்கும் போது ஒருவகையான அழுத்தத்தையும் விரியும்போது ஒரு வகையான அழுத்தத்தையும் ரத்தக் குழாய்களில் ஏற்படுத்துகிறது. இதயம் சுருங்கும்போது உண்டாகும் அழுத்தத்தை சுருங்கழுத்தம் (Systolic Pressure) என்றும் இதயம் விரிவடையும்போது ஏற்படும் அழுத்தத்தை விரிவழுத்தம் (Diastalic Pressure) என்றும் இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர். 120/80 என்பதில், 120 என்ற அளவு சுருங்கழுத்தத்தையும் 80 என்ற அளவு விரிவழுத்தத்தையும் குறிக்கிறது. ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்கு மேல் இருக்கும் நிலையைத்தான் ரத்தமிகு அழுத்த நிலை (Hypertension) எனப்படுகிறது.

ஏன் வருகிறது?

90 சதவிகிதம் பேருக்கு காரணம் ஏதுமின்றி ரத்த அழுத்தம் வருகிறது.  மீதமுள்ள 10 சதவிகிதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகள், மூளை மற்ற காரணங்களினாலும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.  இது தவிர சிலருக்குத் தற்காலிக ரத்த அழுத்தம் வரலாம். மனநிலையில் ஏற்படுகிற மாறுதல்கள், ஓய்வு நிலை, கர்ப்ப காலம் என இதன் பின்னணி யில் பல காரணங்கள் இருக்கலாம். வயதானவர்களுக்கும் நீரிழிவு, பருமனால் பாதிக்கப்பட்டோருக்கும் ரொம்பவும் மன அழுத்தம் தருகிற வேலையில் ஈடுபடுவோருக்கும் இந்த ரத்த அழுத்தமானது நிரந்தரமாகத் தங்கி விடுவதும் உண்டு.

என்னென்ன பரிசோதனைகள்?


சிறுநீர் பரிசோதனை அவசியப்படும். இதன் மூலம் சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம்.  ரத்தத்தில் சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பு உள்ளிட்ட வேறு சில நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். தேவையைப் பொறுத்து இசிஜி, எக்கோ, ஆஞ்சியோகிராம் போன்றவையும் பரிந்துரைக்கப்படும்.

கட்டுப்படுத்த என்ன வழி?

உணவில் உப்பைக் குறைப்பதே முதல் அறிவுரை.
உப்பு அதிகமுள்ள ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உப்பானது, உடலில் நீரை தங்கச் செய்து இதயத்தை பலமிழக்கச் செய்யும்.  கை, கால்களை வீங்கச் செய்யும். 

கொழுப்பு அதிகமுள்ள வெண்ணெய், நெய், எண்ணெய், இனிப்பு, சாக்லெட், ஐஸ்க்ரீம், க்ரீம், சீஸ் போன்றவற்றைத் தவிர்க்கவும்.  உடற்பயிற்சியைத் தவறவிடக் கூடாது.  ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தவிர்த்து விடுவதுடன் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

புகை மற்றும் மதுப்  பழக்கங்களுக்கு உடனடி யாக விடை கொடுக்க வேண்டும். இந்த இரண்டு பழக்கங்களும் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்புக்குக் காரணமாகலாம். ஜாக்கிரதை! 

எந்த நோய்க்குமே சுய மருத்துவம் என்பது தவறு. குறிப்பாக ரத்த அழுத்தப் பிரச்னைக்கு  நீங்களாக மருந்து வாங்கி சாப்பிடுவது உயிருடன் விளையாடுவதற்கு சமமானது. மருத்துவரின் ஆலோசனையின்றி அவர் சிபாரிசு செய்யும் மருந்துகளின் அளவை நீங்களாகவே குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது.  ஒரு முறை எழுதிக் கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.

ரத்த அழுத்தத்தின் அளவை அவ்வப்போது முறையாக பரிசோதிக்க வேண்டும்.  பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள். மனதுக்கும் உடலுக்கும் போதுமான ஓய்வு கொடுங்கள்.  ரத்த அழுத்த நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால் அது  மாரடைப்பு, மூளை பாதிப்புகளை ஏற்படுத்தி, உயிரிழக்கச் செய்யலாம்.

எவ்வளவு இருக்க வேண்டும்?

இயல்பு நிலையில் இதயத்தின் சுருங்கிய அழுத்தம் 120 mmHg ஆகவும் இதயத்தின் விரிந்த இயக்க அழுத்தம் 80 mmHg ஆகவும் இருக்க வேண்டும். அதாவது, 120/80 mmHg என்றிருக்க வேண்டும். ஆனால், 140/90 mmHg க்கு அதிகமாக ரத்த அழுத்த அளவீடு இருக்குமானால் அது உயர் ரத்த அழுத்தமாகும். இதையே ஹைப்பர் டென்ஷன் என்கிறோம்.

 நன்றி தினகரன் பத்திரிகை 
                                                     Kani

பேசும் முறைகள்...

பேசும் முறைகள்...

தாயிடம் - அன்பாக பேசுங்கள்..!
தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்..!
ஆசிரியரிடம் - அடக்கமாக பேசுங்கள்..!
துணைவியுடன் - உண்மையாக பேசுங்கள்..!
சகோதரனிடம் - பாசத்தோடு பேசுங்கள்..!
சகோதரியிடம் - அளவாக பேசுங்கள்..!
குழந்தைகளிடம் - ஆர்வத்தோடு பேசுங்கள்..!
உறவினர்களிடம் - பரிவோடு பேசுங்கள்..!
நண்பர்களிடம் - உரிமையோடு பேசுங்கள்..!
அதிகாரியிடம் - பணிவோடு பேசுங்கள்..!
வியாபாரியிடம் - கறாராக பேசுங்கள்..!
வாடிக்கையாளரிடம் - நேர்மையாக பேசுங்கள்..!
தொழிலாளரிடம் - மனிதநேயத்தோடு பேசுங்கள்..!
அரசியல்வாதியிடம் - ஜாக்கிரதையாக பேசுங்கள்..
என்னிடம் அன்பாக பேசுங்கள்
என்றும் அன்புடன் உங்கள் கனி 

Delhi Zoo - Black Day

http://www.youtube.com/watch?v=1q232FArcmQ

சில நாட்கள் ஏன்தான் உதிக்கிறதோ என்று தோன்றும்.அந்த லிஸ்ட்டில் தான் கடந்த 23ம் தேதியும் சேர்ந்திருக்கிறது.
..
எல்லாரையும் பதை பதைக்க வைத்திருக்கிறது டில்லி உயிரியல் பூங்கா.அந்த 15 நிமிட வீடியோ காட்சி நம் கண் முன்னேயே நிழலாடுகிறது.
..
மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும்.
..
அந்த வாலிபன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்று முதலில் சொல்லப்பட்டது.
..
இன்று, அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், இரண்டு முறை அந்த வாலிபர் புலி இருக்கும் இடத்தில் குதிக்க முயற்சித்ததாகவும், ஆனால் பூங்கா பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டார் என்றும், அதன் பின்னர் பாதுகாவலர்களின் கண்களை மறைத்து, அந்த வாலிபர் உள்ளே குதித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
..
இதில் பல்வேறு கேள்விகள் எழும்புகிறது.
..
1.மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றால் அவரோடு அவரது நண்பர்கள் எப்படி வந்தார்கள்?

2.மன நிலை பாதிக்கப்பட்டவர் பள்ளி சீருடை அணிந்திருந்தது ஏன்?

3.இரண்டு முறை கீழே குதிக்க இருந்த அந்த வாலிபனைத் தடுத்த பாதுகாவலர்கள், ஏன் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்க முன் வர வில்லை?

4.உடன் வந்த நண்பர்களும் ஏன் அவரை அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கவில்லை?
..
கேள்விகள்..கேள்விகள்..எங்கெங்கும் விடையில்லாக் கேள்விகள்.
..
சரி..இந்தக் கேள்விகளால் தான் என்ன பயன்? இந்தக் கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால் மட்டும் அந்த வாலிபன் மீண்டு வரப் போகிறாரா?
..
இல்லை..இல்லவேயில்லை.
..
ஆனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில் நின்றது.
..
அது –
..
கற்றலினால் ஆன பயன் என்ன?
..
எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம்.
எல்லாம் சரிதான்.
..
ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..
..
ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே..
..
அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.

..
ஆனால் ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?
..
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர் கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால் அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10 நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.
..
ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.
..
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
..
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
..
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.
..
இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
..
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?
..
அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.
..
இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன?
..
தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.
..
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
..
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?
..
மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி?
..
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
..
இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே.. ஒரு ஆசிரியனாய் நான் வெட்கப்படுகிறேன்
..
ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது.
..
மெக்சூத்தே.. இளம் வாலிபனே-
..



 எங்களை மன்னித்து விடு..!நீ கஷ்டப்படும் போது  உனக்கு உதவிக்கு யாரும்  வரவில்லை ...

நண்பர்களை இனி இப்படி ஒரு  ஆபத்து யாருக்காவது  வந்தால் தயவு செய்து உதவி செய்யுங்கள்  புகை படம் எடுகாதிங்கள்  - நான் உங்கள் நண்பன் - கனி -

Wednesday, September 3, 2014